பெருநகரம் முதல் குக்கிராமங்கள் வரை பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் ஏராளமான டுபாக்கூர், பிளாக்மெயில் பேர்வழிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அப்படிப்பட்ட நபர்கள் சட்டத்திற்கு புறம்பாக கிரிமினல் செயல்பாடுகளில் ஈடுபட்டு "பிரஸ்" என கூறி தப்பி விடுகிறார்கள். இப்படிப்பட்ட கிரிமினல், மோசடி நபர்களை கண்டறிந்து சட்ட நடவடிக்கை எடுக்க ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்களும் முன்வந்துள்ளார்கள். பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் மோசடியில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்தால் அவர்கள் மீது தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி இஆப எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுபற்றி அறிக்கை கொடுத்துள்ள அவர் கூறும்போது,
"பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் ஒரு சில நபர்கள் தங்களுக்கு உயர் அலுவலர்களை தெரியும் எனவும் , அவர்களிடம் கூறி உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தருகிறேன் என்று பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவர்களிடம் ஏமாற்றி பணத்தை பறித்து விட்டதாக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுக்கள் வரப்பெற்றுள்ளது . இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்வது மட்டுமில்லாமல் காவல்துறை மூலமாக வழக்குப்பதிவு செய்யப்படும் . மேலும் , மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பாக பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் ஒரு சில நபர்கள் போலியான அடையாள அட்டைகள் பயன்படுத்தி, பொது மக்களை ஏமாற்றும் மோசடி செயல்களில் ஈடுபட்டு வருவது தெரிய வருகிறது. அந்த நபர்கள் கண்டறியப்படும் பட்சத்தில் அவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அரசுப் பணியில் உள்ள அலுவலர்களிடம் அவர்களின் பணிக்கு இடையூறு அளிக்கும் வகையில் பிறரின் கோரிக்கை மனுக்களை , பத்திரிகையாளர் என்ற பெயரில் சிபாரிசு செய்யும் நபர்கள் குறித்து உடனடியாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் தகவல் தெரிவிக்கும்படி , அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது . பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் மோசடியில் ஈடுபடும் நபர்களால் பாதிக்கப்பட்டவர்கள் , உடனடியாக 94980-42428 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு தகுந்த ஆதாரத்துடன் குறுந்தகவல் அனுப்பினால் , அந்த நபர்கள் மீது தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்'' என்றார்.
தமிழகம் முழுக்க மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், செய்தித்துறை அதிகாரிகள் இணைந்து போலிகளை வேட்டையாட தொடங்க வேண்டும் என்பதே உழைக்கும் பத்திரிகையாளர்களின் வேண்டுகோள்.