கடந்த 22 ஆம் தேதி மாலை வேளையில் கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தொடர்ந்து ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் இந்து முன்னணியினர் மற்றும் பாஜக நிர்வாகிகள் சிலரின் கார், வீடு, வர்த்தக நிறுவனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவங்கள் குறித்த செய்திகள் தொடர்ந்து வெளியாகி வந்தன.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக மின்துறை அமைச்சரிடம் இது குறித்து கேள்வியை செய்தியாளர்கள் முன் வைத்தனர். அதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, ''காவல்துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது. இதுகுறித்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு விரைவான நடவடிக்கைகளை காவல்துறை எடுத்து வருகிறது. பாஜக கட்சியினை சார்ந்தவர்கள் எதற்காக கைது செய்யப்பட்டார்கள். குறிப்பாக சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு அவர்களுக்கான கோரிக்கைகள் இருந்தால் மாவட்ட ஆட்சியர் அல்லது காவல்துறை அதிகாரிகளிடம் கோரிக்கையை முன் வைக்கலாம். அதை விட்டுவிட்டு சாலை மறியலில் ஈடுபடுவது, குறிப்பாக சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்படுவது இதுபோன்ற நிகழ்வுகளில் ஈடுபட்ட பாஜக காரர்களை மட்டுமே காவல்துறை நடவடிக்கை எடுத்து வழக்குப்பதிவு செய்து கைது செய்து இருக்கிறார்கள். எனவே ஒரு வேண்டுகோளாக சொல்கிறேன் சமூக வலைத்தளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் கோவையில் ஏதோ ஒரு பதற்றமான சூழ்நிலை நிலவுவதைப் போல செய்திகள் சில நேரங்களில் வருகின்றன. அவற்றை தவிர்க்க வேண்டும். கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை எந்தவிதமான அசம்பாவிதமும் இல்லாமல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு எந்தவிதமான பாதிப்புகளும் மக்களுக்கு இல்லாத வகையில் இயல்பு வாழ்க்கையில் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எனவே இதுகுறித்து பதட்டமான செய்திகளை வெளியிடுவதை தவிர்த்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.