கோவை அரசு அச்சகத்தை மூடாதே! - அனைத்துக் கட்சியினர் உண்ணாநிலை போராட்டம்!
கோவை பிரஸ்காலனியில் மத்திய அரசின் கீழ் இயங்கும் அச்சகத்திற்கு மூடுவிழா நடத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளதை கண்டித்து, அனைத்து கட்சிகள் சார்பாக பெரிநாயக்கன்பாளையம் பேருந்துநிறுத்தத்தில் உண்ணாநிலை போராட்டத்தில் அனைத்து கட்சியின் சார்பாக நடத்தப்பட்டது.
நாடு முழுவதும் மத்திய அரசின் கீழ் 17 அச்சகங்கள் இயங்கி வருகின்றன. இதில் தமிழகத்தில் கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த பிரஸ்காலனியில் மத்திய அரசின் அச்சகம் இயங்கி வருகிறது. இந்த அச்சகங்களில் தபால்துறையில் பயன்படுத்தும் கடிதங்கள், கார்டுகள், ஏர்போர்ஸ் உள்ளிட்ட மத்திய அரசின் துறை சார்ந்த அனைத்து விண்ணப்பங்களும் அச்சடிக்கப்படுகின்றன.
இந்நிலையில் இந்த அச்சகத்தை மூடிவிட்டு மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் செயல்படும் அச்சகத்தோடு இணைக்க முடிவெடுத்துள்ளது. இதேபோல மைசூரில் உள்ள அச்சகம், கேரளாவில் உள்ள அச்சகத்தையும் மூடுவிழா நடத்த மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக கோவையில் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக செயல்படும் இந்த அச்சகத்திற்கு சொந்தமாக 132 ஏக்கர் நிலம் உள்ளது.
இதில், பழங்குடியினரின் பள்ளிக்கூடம், தபால்நிலையம், ரேசன்கடைகள் மற்றும் இவ்வூழியர்களின் குடியிருப்புகள் உள்ளது. இந்த நிலங்கள் மற்றும் சொத்துக்களை விற்பதற்கும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதை வன்மையாக அனைத்து கட்சிகளும் கண்டித்துள்ளன. இங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஆர்டர் இருந்தும் மத்திய அரசு வட மாநில மக்களின் நலன் கருதி எடுக்கும் முடிவால் தென்னிந்தியர்கள் பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவே மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தவேண்டும் என்பதற்காக அனைத்து கட்சிகள் சார்பாக உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது.