கோயம்புத்தூர் மாவட்டத்தில் கமலாத்தாள் என்ற மூதாட்டி ஒரு இட்லியை ஒரு ரூபாய்க்கு விற்று வருகிறார். நாளுக்கு நாள் மளிகை பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையிலும், ஒரு இட்லியை ஒரு ரூபாய்க்கே தற்போது வரை விற்று வருகிறார் கமலாத்தாள். மேலும் இட்லிக்கு சட்னி மற்றும் சாம்பார் ஆகியவற்றையும் வழங்குகிறார். இட்லி சுடுவது, சட்னி அரைப்பது, சாம்பார் செய்வது என்று அத்தனை வேலைகளையும் தன ஆளாக செய்து வருகிறார். மேலும், சமைப்பதற்கென்று தற்போது வரை விறகு அடுப்பையே பயன்படுத்தி வருகிறார் மூதாட்டி கமலாத்தாள்.
சமீபத்தில், மூதாட்டி கமலாத்தாள் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பது குறித்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதன் பின்னர், அருகிலுள்ள பகுதியைச் சேர்ந்தவர்கள், வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் என அனைவரும் கமலாத்தாள் இட்லி விற்கும் கடைக்கு படையெடுத்தனர். இதனால் அவரது கடை பிரபலமானது.
ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பது குறித்த வீடியோ ஒன்றை தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்தது. அந்த வீடீயோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள, மகேந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா, கமலாத்தாள் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்வது குறித்து வியப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் “நம் உழைப்பின் ஒட்டுமொத்தத்தையும் சேர்த்து கணக்கிட்டால் கூட கமலாத்தாள் போன்றவர்களின் உழைப்பின் கால்தூசிக்கு கூட ஒப்பாகாது” என்று தெரிவித்துள்ளார்.
— anand mahindra (@anandmahindra) September 10, 2019
மேலும் எல்பிஜி கேஸ் அடுப்பு கொடுத்து அவரது தொழிலில் முதலீடு செய்ய தயாராக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து, மூதாட்டி கமலாத்தாளுக்கு உதவ பலர் முன்வந்துள்ளனர். இதனிடையே, கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் கே.ராஜாமணி, மூதாட்டி கமலாத்தாளை சந்தித்து உதவிகளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது மூதாட்டி கமலாத்தாளிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், தங்களுக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாகவும், எப்போது வேண்டுமானாலும் என்னை சந்தித்து உதவிகளை கேட்கலாம் என கூறினார்.