கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு அருகே உள்ளது சமயபுரம் கிராமம். இந்த பகுதியை ஒட்டியுள்ள பவானி ஆற்றங்கரையில், உணவு மற்றும் நீர் நிலைகளை தேடி அலையும் காட்டு யானைகள், சிறுத்தைகள், கரடிகள் போன்ற வன விலங்குகள், மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதனால், அங்கு வசிக்கும் பொதுமக்கள், காலையிலும் மாலையிலும் ஒருவித அச்சத்துடனே வீட்டைவிட்டு வெளியே வருகின்றனர்.
அதுமட்டுமின்றி, நெல்லிமலை வனப்பகுதியில் இருந்து இரவு நேரங்களில் வெளியே வரும் காட்டுயானைகள், அங்கிருக்கும் விவசாய தோட்டங்களில் புகுந்து சேதப்படுத்திவிட்டு, அதிகாலை நேரத்தில் கல்லார் வனப்பகுதியாக காட்டுக்குள் சென்றடைகின்றன. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, நெல்லிமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பாகுபலி என்ற காட்டுயானை, சமயபுரம் சாலையைக் கடந்து குடியிருப்புகள் வழியாக வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இதனால், பொதுமக்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சிறிது அடங்குவதற்குள், மற்றொரு காட்டுயானையும் அதே பகுதிக்குள் வந்துள்ளது.
அப்போது, அந்த காட்டுயானை குடியிருப்புக்குள் நுழையும் போது, அங்கிருந்த தெருநாய் ஒன்று குரைத்துக் கொண்டே காட்டு யானையை சுற்றி சுற்றி வந்துள்ளது. ஒருகட்டத்தில், ஆவேசமடைந்த காட்டுயானை, பிளிறிக்கொண்டே தும்பிக்கையை தரையில் அடித்து அந்த தெரு நாயை விரட்டியது. அதுமட்டுமின்றி, அங்கிருந்த ஒரு வீட்டையும் தாக்க முயற்சித்துள்ளது.
இதையடுத்து, காட்டுயானைகளின் அட்டகாசத்தால் அச்சமடைந்த பொதுமக்கள், ஒருவித நடுக்கத்துடனே வீட்டுக்குள் முடங்கியிருக்கின்றன. மேலும், ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளின் நடமாட்டத்தை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என் கோரிக்கை விடுத்தது வருகின்றனர் சமயபுரம் பகுதி மக்கள்.