கும்பகோணம் மாவட்டம், ஆடுதுறை அடுத்த மேல் மருத்துவக்குடி பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மகன் பிரவீன் (வயது 23). கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வீட்டை விட்டு வெளியேறிய இளைஞர் பிரவீன் கோவைக்கு வேலை தேடி வந்தார்.
கோவை நகரில் ஆங்காங்கே கிடைக்கும் வேலைகளை பிரவீன் செய்து கொண்டு, கிடைக்கும் இடத்தில் தங்கி இருந்து வந்தார். கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பிரவீன் சரியான வேலை கிடைக்காமல் மன விரக்தியில் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று (18/06/2021) இரவு 10.00 மணியளவில் காந்திபுரம் மேம்பாலம் பகுதியில் நடந்து சென்றுக் கொண்டிருந்த பிரவீன் மேம்பாலத்தில் இருந்து கீழே சாலையில் குதித்து தற்கொலை செய்துக் கொண்டார். இதில் தலை மற்றும் கை, கால்களில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் அவர் துடித்தப்படி மயங்கிக் கிடந்தார். இது குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர்.
இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உடனடியாக பிரவீனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், பிரவீன் சிகிச்சைப் பலனளிக்காமல் இன்று (19/06/2021) காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காட்டூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.