கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் நான்கு பேருக்கு கரோனா நோய்த் தொற்று நேற்று (12-04-2020) உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நோயாளியின் குடும்பத்தில் ஒருவர் மரணமடைய, அதற்காக பெங்களூரில் இருக்கும் அவரது உறவினரை அழைக்க வேண்டி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஸ் கேட்டு விண்ணப்பிப்பதற்காக ஒருவர் வந்து சென்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவர்கள் வந்துபோன பகுதி மற்றும் சந்தித்த அலுவலர்கள் உள்ளிட்ட விவரங்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் வெளிநபர்கள் வருவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே கோவையில் கரோனா நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்த மருத்துவ முதுகலை மாணவர்கள் இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது இரண்டு மருத்துவ மாணவர்களும் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றன. இவர்கள் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் என்பதால் அவர்கள் தங்கியிருந்த அறை உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் ஏற்கனவே 8 மருத்துவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.