Published on 01/05/2020 | Edited on 01/05/2020
தமிழகத்தில் கரோனா பாதிப்பில் இரண்டாவது மாவட்டமாக இருந்த கோவை, சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலமாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
இதையொட்டி, பத்திரிகையாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் ராசாமணி பேசுகையில், கோவையில் 141 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது அதிர்ச்சி அடைய வைத்தது. இந்த நிலையில் 132 பேர் முழுமையான குணமடைந்துள்ளனர். மீதம் கோவையில் இன்னும் 9 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். இந்த சூழ்நிலையில் கோவையில் சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் தொடர் கண்காணிப்பு வளையத்தில் உள்ளது.
கே.கே புதூர் பகுதியில் விதிக்கப்பட்டு இருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. மேலும் கோவை மாவட்டம் சிவப்பு நிற பகுதியில் இருந்து ஆரஞ்சு நிற பகுதியாக வந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கின்றது. விரைவில் பச்சை மண்டலமாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார்.
இன்னும் ஒருவார காலத்திற்குள் கோவையில் சிகிச்சையில் இருக்கும் 9 பேரும் நலமுற்று வீடு திரும்புவார்கள் எனவும் மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்தார். இனி பச்சை மண்டலமாக மாறும் சூழல் வந்து விடும் என்கிற பேச்சு, கோவை மக்களை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.