வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று (18.10.2021) காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, திருச்சி, புதுக்கோட்டை என அவருக்குச் சொந்தமான 43 இடங்களில் இந்த சோதனை நடைபெற்ற நிலையில், மேலும் சில இடங்களைச் சேர்ந்து மொத்தம் 50 இடங்களில் சோதனை நடைபெற்றது. அவரது சொந்த ஊரான புதுக்கோட்டையிலும் இந்த சோதனை நடைபெற்றது.
ரெய்டு நடவடிக்கைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த விஜயபாஸ்கர், "எனது வீட்டிலிருந்து பணமோ, பொருட்களோ பறிமுதல் செய்யப்படவில்லை. அரசியலில் இந்த சோதனைகள் வருவது இயற்கையான ஒன்றுதான். லஞ்ச ஒழிப்பு சோதனையின்போது எனக்கு ஆதரவு தெரிவித்த ஈபிஎஸ், ஓபிஎஸ், அதிமுக தொண்டர்களுக்கு நன்றி" என கூறியுள்ளார்.
சென்னையில் நேற்று அவருக்குத் தொடர்பான பல இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் விஜயபாஸ்கருடன் தொடர்புடைய சந்திரசேகர் என்ற நபருக்குச் சொந்தமான ரியல் எஸ்டேட் அலுவலகத்திற்கு லஞ்ச ஒழிப்புத்துறையினர் சீல் வைத்துள்ளனர். சோதனை செய்வதற்காக நேற்று அங்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சென்ற நிலையில், அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. உரிமையாளர் சந்திரசேகரை போலீசார் தொடர்புகொண்டபோது, தான் வெளியூரில் இருப்பதாகவும், தன்னால் வர இயலாது என சந்திரசேகர் கூறியுள்ளார். இதனால் அலுவலகத்தைத் திறக்க யாரும் வராததால் போலீசார் சீல் வைத்ததோடு நோட்டீஸும் ஒட்டிச் சென்றனர். மற்றொரு நாள் சீல் உடைக்கப்பட்டு அந்த அலுவலகம் சோதனைக்கு உள்ளாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.