கரூரில் உள்ள தனியார் கூட்டரங்கில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பில் மாநில செயற்குழு கூட்டம் மற்றும் விவசாயிகள் பிரச்சினை தொடர்பான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட தலைவர் பாலு குட்டி தலைமையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநிலத் தலைவர் ஏ.கே.சண்முகம் மற்றும் 10 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் என 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் புதுக்கோட்டை, ஈரோடு, நாமக்கல், திருச்சி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தற்போது உள்ள தென்னை விவசாயத்தின் நிலை குறித்தும், தேங்காய் விற்பனை குறித்தும் நிர்வாகிகள் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்தனர்.
கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களைச் சந்தித்த மாநிலத் தலைவர் ஏ.கே.சண்முகம், “உள்நாட்டில் ஏராளமான எண்ணெய் வித்து பயிர்கள் உற்பத்தியாகி மக்களுக்குத் தேவையான எண்ணெய் கொடுத்துக் கொண்டிருக்கும் போது, வெளிநாட்டிலிருந்து பாமாயில் எண்ணெய் இறக்குமதி செய்ததன் காரணமாக இன்று 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகின்றனர். உள்நாட்டில் விளையக்கூடிய தேங்காய் மூலம் தயாரிக்கும் தேங்காய் எண்ணெய்யை ரேஷன் கடை மற்றும் சத்துணவு மையங்களிலும் பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொப்பரை கொள்முதல் விலையை 150 ரூபாயாக உயர்த்த வேண்டும். கடந்த 2009ம் ஆண்டு கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும் என்று கோரிக்கையை வைத்துப் பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். இதன் வாயிலாக, அன்றைய தமிழக முதலமைச்சர் கலைஞர், இது தொடர்பாக சிவசுப்பிரமணியன் என்பவர் தலைமையில் ஒரு குழுவை அமைத்து, அதன் மூலம் வழங்கப்பட்ட பரிந்துரையை ஏற்று நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். எனவே சிவசுப்பிரமணியன் குழுவின் அறிக்கையை அறிவித்தால் போதும் என்பது உள்ளிட்ட நான்கு கோரிக்கைகளை முன்வைத்து, தென்னை விவசாயிகளை ஒருங்கிணைத்து சென்னையில் மாபெரும் போராட்டம் நடத்தி அரசின் கவனத்தை ஈர்க்க இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.