வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கரசமங்களத்தை சேர்ந்தவர் 23 வயதான ஜெனிபர். இவரது தந்தை இறந்துவிட்டார். தாயார் ஜெயந்தி தான் கூலி வேலைக்கு சென்று மகளை படிக்க வைத்தார். நர்சிங் படித்த அவர் தென்னிந்தியாவின் பிரபலமான மருத்துவமனையான சி.எம்.சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக கடந்த இரண்டு மாதமாக பணியாற்றிவந்தார்.
மருத்துவமனையில் பிரசவ வார்டில் அவருக்கு பணி ஒதுக்கப்பட்டு பணி செய்துவந்துள்ளார். மருத்துவமனையில் 8 மணி நேரத்துக்கு ஒருமுறை ஷிப்ட் மாறும், பணியாளர்கள் மாறுவார்கள். இந்த நடைமுறை தனக்கு கடைபிடிக்கவில்லை என தனது தாயாரிடம் குறைப்பட்டுள்ளார் செவிலியர் ஜெனிபர். என்னை எப்போதும் மட்டம் தட்டுகிறார் என தலைமை செவிலியர் லஷ்மி மீது தனது தாயாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் 26ந்தேதி இரவு பணி முடிந்து 27ந்தேதி காலை 9 மணிக்கு வீட்டுக்கு சோகமாக வந்துள்ளார். வந்தவர் தனது அறைக்கு சென்று உள்பக்கமாக தாழிட்டிக்கொண்டுள்ளார். மகள் தூங்குகிறார் என நினைத்துள்ளார் ஜெயந்தி. சாப்பிடுவதற்காக கதவை தட்டியுள்ளார். கதவை திறக்காததால் பயந்துப்போய் ஜன்னல் வழியாக பார்த்தபோது சேலையால் தூக்குமாட்டிக்கொண்டு தொங்கிக்கொண்டு இருந்துள்ளார்.
ஆசையாக வளர்த்த மகள் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியாகி கத்தி கதறியதும் அக்கம் பக்க வீட்டுக்காரர்கள், ஊர்க்காரர்கள் வீட்டு முன் ஓடிவந்து ஜெனிபரை தூக்கில் இருந்து இறக்கி அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டார் என உறுதி செய்தனர்.
இதில் ஆத்திரமான உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், உடலை எடுத்துக்கொண்டு சி.எம்.சி மருத்துவமனை முன் வாயில் முன் கொண்டுவந்து சாலையில் வைத்துவிட்டு மறியலில் ஈடுப்பட்டனர். வேலூர் – ஆற்காடு சாலை போக்குவரத்து பாதிப்பால் திணறியது. போலிஸார் மற்றும் சி.எம்.சி நிர்வாகத்தார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் முடிவில், விதிப்படி 8 மணி நேர வேலை, இறந்த ஜெனிபர் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை, இழப்பீடு போன்றவை வழங்க ஒப்புக்கொண்டது. இதனால் மறியல் முடிவுக்கு வந்தது.
இந்திய அளவில் புகழ்பெற்ற சி.எம்.சி மருத்துவமனையில் பணி அழுத்தம் காரணமாக செவிலியர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவமனை தரப்பிலோ, நீட் தேர்வில் இருந்து தகுதி பெற்று வரும் மாணவ – மாணவிகளுக்கு சி.எம்.சி விதிமுறைகளை ஏற்றுக்கொண்டால் மட்டுமே இடம் தரப்படும் என்கிற கோரிக்கையை மத்தியரசு ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் கடந்த கல்வியாண்டில் சி.எம்.சி மருத்துவ மாணவர் சேர்க்கையை நாங்கள் நிறுத்திவைத்துவிட்டோம். அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால் கடந்த ஆண்டு 100 இளநிலை மருத்துவ மாணவர்கள் கிடைக்கவில்லை. இதனால் பணி பளு அதிகரித்துள்ளது. மக்கள் அதிகளவில் மருத்துவம் பார்த்துக்கொள்ள வருகின்றனர். மருத்துவர்கள் இல்லாமல் சிரமமாக உள்ளது அதுதான் சிக்கலுக்கு காரணம் என்கிறார்கள்.