தமிழ்நாட்டில் கரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவல் உயர்ந்துவரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது. அதில் முக்கியமாக வார இறுதி நாளும், விடுமுறை நாளுமான ஞாயிற்றுக்கிழமை முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு முடக்கம் அமலுக்கு வந்துள்ளது. தமிழ்நாடு முழுக்க 60,000 காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், சென்னையில் மட்டும் 10,000 காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
உரிய ஆவணங்கள் இருந்தால் மட்டுமே வாகனங்களை காவல்துறையினர் அனுமதிக்கின்றனர். ஆவணங்கள் இல்லாத வாகனங்களின் உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்து வருகின்றனர். முழுமுடக்கம் காரணமாக சென்னை உட்பட மாநிலத்தின் பல பகுதிகளிலும் சாலைகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன. அதேபோல், எப்போதும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் கோயம்பேடு காய்கறி சந்தை இன்று பொதுமுடக்கத்தினால் வெறிச்சோடி காணப்பட்டது.