பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் எடுத்த நடவடிக்கையால் 24 மணி நேரத்தில் திருச்சி மாவட்டம் கே.கே. நகர் முதல் ஓலையூர் வரை கூடுதல் பேருந்து சேவை இயக்கம் தொடங்கப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் திருச்சி, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று திருச்சி மாவட்டத்திற்கு வருகை தந்தபோது திருச்சி விமான நிலையத்தில் 64வது வார்டு பகுதியைச் சேர்ந்த ஹர்ஷத் பேகம் மற்றும் ஓலையூர் சிப்பி நகர் குடியிருப்போர் தங்களது பகுதிக்குக் கூடுதல் பேருந்து சேவை வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.
மனுவை பரிசீலனை செய்த தமிழ்நாடு முதல்வர், வழித்தடத்தை உடனடியாக இயக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் லிமிடெட் திருச்சி மண்டலம் சார்பில், கே.கே.நகர் முதல் ஓலையூர் வரை மகளிர்க்கான கட்டணமில்லா கூடுதல் பேருந்து சேவையை இன்று காலை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார் தலைமையில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி கே.கே.நகர் முதல் ஓலையூர் வரை பேருந்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் பொதுமக்களை ஏற்றிக்கொண்டு பேருந்தை சிறிது தூரம் ஓட்டிச் சென்றார்.
இந்தப் பேருந்து கே.கே.நகர் - ஓலையூர் வழித் தடத்தில் இயக்கப்படும். காலை, மாலை என 8 முறை கூடுதலாக இயக்கப்பட உள்ளது. இந்நிகழ்வில் மாத்தூர் ஒன்றிய செயலாளர் கருப்பையா, போக்குவரத்துத் துறை கோட்ட மேலாளர் ராஜமோகன், துணை மேலாளர் (வணிகம்) சதீஷ் மற்றும் அதிகாரிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.