தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் நாளை (17.10.2024) அதிகாலை கரையைக் கடக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சென்னையில் நேற்று பெய்த கனமழை காரணமாக சில பகுதிகளில் நீர் தேங்கும் சூழல் ஏற்பட்டது. அதே சமயம் சென்னையில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதனால் சென்னைக்கான ரெட் அலர்ட் திரும்பப் பெறப்படும் எனக் கருதப்பட்டது. இத்தகைய சூழலில் தான் வானிலை ஆய்வு மையம் சார்பில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு மீண்டும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது.
இதற்கிடையே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (16.10.2024) சென்னை, கிண்டி ரேஸ் கிளப் நிர்வாகத்திடமிருந்து மீளப்பெறப்பட்ட நிலத்தில் ஏற்கனவே உள்ள 3 குளங்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் மூலமாக ஆழப்படுத்தி அகலப்படுத்தும் பணிகள் மற்றும் புதிதாக 4 குளம் வெட்டும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நாராயணபுரம் ஏரியில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகள் மற்றும் ஏரிக்கரையினை பலப்படுத்தும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வேளச்சேரி இரயில்வே ஆறுகண் கல்வெட்டு பகுதியில் உள்ள வீராங்கால் ஓடைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் கே.என். நேரு, மா. சுப்பிரமணியம், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன், பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் பெ. அமுதா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் தா. கார்த்திகேயன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. குமரகுருபரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
இந்நிலையில் இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கனமழை குறித்த ‘அலெர்ட்’ பெறப்பட்டவுடன் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, பொதுமக்களின் ஒத்துழைப்போடு எதிர்கொண்டோம். பெரும்பாலான இடங்களின் மழைநீர் தேங்காமல் சரிசெய்யப்பட்டுள்ளது. முழுமையாக மழைநீர் அகற்றப்படும் வரையில் தொய்வின்றிக் களப்பணியைத் தொடர்ந்திடுவோம்!” எனக் குறிப்பிட்டுள்ளார். அதோடு காணொளி ஒன்றையும் இணைத்துள்ளார்.