Skip to main content

“அனைத்து தூதரக வழிமுறைகளையும் பயன்படுத்திட வேண்டும்” - முதல்வர் வலியுறுத்தல்!

Published on 07/03/2025 | Edited on 07/03/2025

 

CM mk stalin emphasizes All diplomatic channels should be used

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 14 மீனவர்களை நேற்று (06.03.2025) அவர்களது மீன்பிடிப் படகுடன் இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.  இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் மேலும் கைது செய்யப்படுவதைத் தடுத்திட உடனடி தூதரக நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு இன்று (07.03.2025) கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், “ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று மீன்பிடிக்கச் சென்ற 14 தமிழக மீனவர்களை அவர்களது மீன்பிடி விசைப்படகுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. 2025ஆம் ஆண்டில், கடந்த இரு மாதங்களில், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அவர்களது மீன்பிடிப் படகுகளுடன் கைது செய்யப்படுவது இது ஒன்பதாவது முறை ஆகும்.  இன்றைய நிலவரப்படி 227 மீன்பிடிப் படகுகளும், 107 மீனவர்களும் இலங்கை அதிகாரிகளின் பிடியில் உள்ளனர்.

தற்போது, இலங்கையில் தமிழக மீனவர்கள் நீண்ட காலத்திற்கு சிறை வைக்கப்பட்டிருப்பதோடு, அவர்களை விடுவிக்க அதிகபட்ச அபராதத்தை விதிக்கத் தொடங்கியுள்ளனர். சிறைவாசம், அபராதம் மற்றும் இலங்கை சிறையில் இருக்கும் காலத்தில் ஏற்படும் வருமான இழப்பு போன்ற துன்பங்களும் ஏற்படுகிறது. இதற்கும் அப்பால், அவர்களின் பொருளாதாரத்திற்கு உதவுக்கூடிய ஒரே ஆதாரமாக விளங்கும் அவர்களின் படகுகளையும் இலங்கை அரசு திருப்பித் தராமல் உள்ளது. இதனால் தமிழக மீனவர்கள் தற்போது தங்களது வாழ்வாதாரத்தில் பெரும் பொருளாதார இழப்பை எதிர்கொண்டுள்ளனர்.

எனவே, கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் மேலும் கைது செய்யப்படுவதை தடுத்திடுவதற்கு தேவையான அனைத்து தூதரக வழிமுறைகளையும் பயன்படுத்திட வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார். 
 

சார்ந்த செய்திகள்