பொதுமுடக்கத்தை நீட்டிப்பது பற்றி முடிவெடுக்க மருத்துவ வல்லுநர் குழுவினருடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக்குப் பிறகு மருத்துவ வல்லுநர் குழுவின் பிரதிநிதியான ஐ.சி.எம்.ஆர். விஞ்ஞானியும், தேசிய தொற்றுநோய்த் தடுப்பு நிறுவனத்தின் துணை இயக்குனருமான பிரதீப் கவுர், தொற்றுநோய் தடுப்பு நிபுணர் குகானந்தம், மருத்துவர் ராமசுப்ரமணியம் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது; "கரோனா பாதிப்பு மக்கள் தொகை அதிகமாக உள்ள சென்னையில் அதிகமாக இருக்கிறது. சென்னை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் மட்டுமே கரோனா அதிகமாக உள்ளது. கரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்; அப்போதுதான் தொற்றைக் கண்டறிய முடியும். கரோனா தொற்று பாதிப்பு அதிகமாவதைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை. எல்லா இடங்களிலும், எல்லா நேரத்திலும் முகக்கவசம் அணிய வேண்டும். கரோனா அதிகம் உள்ளதால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தளர்வுகளைத் தர வேண்டாம்; இந்த நான்கு மாவட்டங்களில் கட்டுப்பாடு தொடர வேண்டும்; நான்கு மாவட்டங்களைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் தளர்வுகளைத் தர பரிந்துரைத்தோம். தமிழகம் முழுமைக்கும் ஒரே மாதிரியான ஊரடங்கு தேவையில்லை. இது ஒரு புதிய வைரஸ்- அனைத்து பகுதிகளிலும் ஆய்வு நடத்தி வருகிறோம்.
தமிழகத்தில் மொத்த கரோனா பாதிப்பில் 77% சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மட்டுமே உள்ளது. கரோனா பாதிப்பு நீடிப்பதால் பொதுமுடக்கத்தை முழுவதுமாகத் தளர்த்த முடியாது. சென்னையில் பொது போக்குவரத்து பஸ், ரயில்களை இயக்கக்கூடாது; வழிபாட்டுத் தலங்களைத் திறக்கக்கூடாது. இருமும் போது கைகளை மூடிக் கொள்வதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். கரோனாவில் இருந்து வயதானவர்களைக் குடும்ப உறுப்பினர்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். சென்னையில் கரோனா பாதிப்பு சமூகப் பரவலாக மாறவில்லை." இவ்வாறு மருத்துவ வல்லுநர்கள் கூறினர்.