இன்று (05.08.2021) கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி, சாமனப்பள்ளி கிராமத்தில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தைத் துவங்கிவைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின். மதுரை, கோவை, சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, சென்னை ஆகிய ஏழு மாவட்டங்களில் காணொலி காட்சி வாயிலாக இத்திட்டத்தைத் துவங்கிவைத்தார். இந்நிலையில், ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தைத் துவங்கிவைத்த முதல்வர், அதன் பின்னர் அந்தப் பகுதி மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக சில உதவிகளையும் செய்தார்.
அதன் பின்னர் முதல்வர், இரண்டு பயனாளிகளுக்கு அவர்கள் வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிப்பதைப் பார்வையிட்டார். காலிழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்களை வழங்கினார். பெட்டமுகுனாலம் மலைவாழ் மக்கள் பயன்பாட்டிற்காக 108 அவசரகால ஆம்புலன்ஸ் ஊர்தியின் சாவியினை வழங்கினார். கர்ப்பிணி தாய்மார்களின் மஞ்சள் காமாலை நோய்க்கான விரைவு பரிசோதனை திட்டத்தைத் துவங்கிவைத்தார். இந்த நிகழ்வின்போது கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.