மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
அந்தமான் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது உருவாகியுள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்றிலிருந்து மழை பெய்யத் தொடங்கியுள்ளது. டெல்டா மாவட்டங்கள், சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் நேற்று இரவில் இருந்து பரவலாக விட்டு விட்டு கனமழை பொழிந்து வருகிறது. இந்நிலையில் தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை எழிலகத்தில் உள்ள அவசரகால செயல்பாட்டு மையத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது, மழை நிவாரணப் பணிகள் தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து மழை பாதிப்புள்ள கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். அதன்படி கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ், மயிலாடுதுறை ஆட்சியர் மகாபாரதி ஆகியோருடன் மழை பாதிப்புகள் குறித்து முதல்வர் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே. பிரபாகர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் உடன் இருந்தனர்.