




சிவகங்கை மாவட்டம், கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வு பணிகள் அண்மையில் நிறைவடைந்த நிலையில், கீழடியில் தொல்லியல் அகழாய்வு மற்றும் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டார்.
சிவகங்கை மாவட்டம், கீழடியில் 7ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி அண்மையில் முடிவடைந்தது. அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களைக் காட்சிப்படுத்த அருங்காட்சியகம் அமைப்பதற்கு 12 கோடியே 21 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளைப் பார்வையிடவும் துரிதப்படுத்தவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரடியாக கீழடி சென்று ஆய்வு செய்தார். அதேபோல், 7-வது கட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்களை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு அதன் தன்மை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், கீழடியில் அகழ்வாராய்ச்சிக்காகத் தோண்டப்பட்ட இடங்களையும் பார்வையிட்ட அவர் அங்கு அரசு சார்பில் அமைக்கப்பட்டு வரும் அருங்காட்சியகம் கட்டுமான பணிகளையும் பார்வையிட்டார்.