தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் சிறுமி ஒருவருக்கு தூய்மைப் பணியாளர் ஒருவர் குளுக்கோஸ் ஏற்றும் வீடியோ சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் சிறுமி ஒருவர் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுமிக்கு டெங்கு அறிகுறி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதன் பின் மருத்துவமனையின் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டார்.
இதன் பின் சிறுமிக்கு குளுக்கோஸ் ஏற்ற பரிந்துரை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து செவிலியர் ஒருவர் சிறுமிக்கு ஊசி குத்திச் சென்ற நிலையில் தூய்மைப் பணியாளர் ஒருவர் வந்து சிறுமிக்கு குளுக்கோஸினை மாட்டிவிட்டுள்ளார். குளுக்கோஸ் இறங்காத நிலையில் சிறுமி வலியால் அழுதுள்ளார்.
இதனையடுத்து அங்கு வந்த மற்றொரு தூய்மைப் பணியாளர் குளுக்கோஸ் தவறாக மாட்டப்பட்டுள்ளது என்று கூறி அதைச் சரி செய்து விட்டுச் சென்றுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவியது. மேலும் இது குறித்து தலைமை மருத்துவருக்கு புகார் அளிக்கப்பட்டது. இதற்குப் பதில் அளித்த அவர் மருத்துவமனையில் செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளதாகவும் இனி இதுபோன்று நிகழாது என்றும் கூறியுள்ளார்.