நலவாரிய ஆன்லைன் பதிவை எளிமைப்படுத்தவும், அரசு அறிவித்த கரோனா ஊரடங்குகால நிவாரணத்தை நலவாரிய உறுப்பினர்கள் அனைவருக்கும் வழங்கக்கோரியும் தென்சென்னை சிஐடியு சார்பில் தி.நகரில் உள்ள சென்னை மாவட்ட நலவாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்பொழுது செய்தியாளர்களிடம் போராட்டத்தில் ஈடுபட்டோர், “இந்திய தொழிற்சங்கம் மையம் சி.ஐ.டி.யு. சார்பாக மாவட்ட தலைநகரங்களில் உள்ள அனைத்து தொழிலாளர் ஆணையம் முன்பாக தொழிலாளர் பிரச்சனைகளை தீர்க்கக்கோரி, 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் அமைந்துள்ள தொழிலாளர் ஆணையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரோனா நிவாரண நிதி இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை. ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு பல்வேறு குளறுபடியால் நிவாரண நிதி கிடைக்காமல் அவதிப்பட்டுவருகின்றனர். இவர்களிடம் அனைத்துவிதமான ஆவணங்களும் சரியாக இருந்தபோதிலும் அரசு நிவாரணம் வழங்கவில்லை. இதனை உடனடியாக அரசு வழங்க வேண்டும் என்று கோட்டுகொள்கிறோம். ஆன்லைன் பதிவை அறிவித்தார்கள். ஆனால், ஆன்லைன் பதிவை அறிவித்தப்பிறகு சான்றிதழ்களை நேரடியாக வாங்க மறுக்கிறார்கள்.
நேரடியாகவும், ஆன்லைன் வழியாகவும் வாங்க வேண்டும் என்று கேட்கிறோம். ஆன்லைன் முறையை அறிமுகம் செய்து இதுவரை அதில் ஏழு முறை மாற்றம் செய்துவிட்டனர். இருந்தபோதிலும் இன்னும் அதில் சிலவற்றுக்கு படிவங்கள் இல்லை. அப்படி இருக்கும்போது எப்படி நாங்கள் அதில் பதிவு செய்வது. மேலும் சி.ஐ.டி.யு சங்கத்தின் மூலம் பதிவு செய்தால் பதிவு செய்ய முடியவில்லை. ஆனால், ஏஜெண்டுகள் மூலம் பதிவுசெய்தால் உடனடியாக பதிவுசெய்யப்பட்டு கார்ட் வருகிறது. இது தற்போது நடக்கும் விவசாயிகள் நிவாரணம் நிதி முறைகேடு போன்று உள்ளதாக சந்தேகிக்கீறோம். அப்படி எங்கள் சந்தேகம் ஞாயமற்றது என்று இந்த அரசு நினைத்தால், உடனடியாக கண்காணிப்பு குழு கூட்டத்தை கூட்டி நிர்வாகத்தை முறைபடுத்த வேண்டும். ஆனால், கண்காணிப்பு குழு கூட்டமே நடத்துவதில்லை.
தலைமையில் கேட்டால் பணம் வழங்கிவிட்டோம் என்கிறார்கள். இங்கு வந்து கேட்டால் பணத்தை திருப்பி அனுப்பிவிட்டோம் என்கிறார்கள். சரி பணத்தை திருப்பி அனுப்பியதற்கான ஆதாரத்தை கொடுங்கள் என்றாலும் கொடுக்க மறுக்கிறார்கள். பணத்தை திருப்பி அனுப்ப இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. 150 ஆட்டோ தொழிலாளர்களின் சான்றிதழ்களை ஏழாவது முறையாக கொடுக்கிறோம் இருந்தும் பணம் வழங்கவில்லை. இதையெல்லாம் கண்டித்துதான் இன்று தமிழகம் முழுக்க இந்த போராட்டத்தை சி.ஐ.டி.யு. கையில் எடுத்துள்ளது” என்று தெரிவித்தார்கள்.