பெருநகரங்கள் முதல் சிறிய கிராமங்கள் வரை போராட்ட நெருப்பு இன்னும் அணையாமல் இருக்கிறது என்றால் அது மத்திய பாஜக மோடி அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்ட மசோதாவும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கும் எதிராக நடக்கும் போராட்டம் தான்.
இன்று ஈரோட்டில் பல்வேறு அமைப்புகள் இணைந்து மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடத்தினார்கள். ஈரோடு பெரியார் நகரில் தொடங்கி வ.உ.சி. பூங்கா வரை சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு மனித சங்கிலியாக மக்கள் நின்று திரும்பப் பெறு... திரும்பப் பெறு... குடியுரிமை திருந்த சட்ட மசோதாவை திரும்ப பெறு என்றும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாதே எனவும் தமிழக எடப்பாடி அரசு குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்ற வேண்டும் என்றும் முழக்கங்களை எழுப்பினர். அதேபோல் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பல்வேறு அமைப்புகள் இணைந்து மனித சங்கிலி போராட்டத்தை நடத்தினார்கள்.
இதேபோல் இன்று மாநிலம் முழுக்க பல்வேறு ஊர்களில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. உலக நாடுகள் பலவும் இந்தியாவில் பா.ஜ.க. அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்ட மசோதாவால் மக்களை மதரீதியாக பிரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என மத்திய மோடி அரசு ஒதுங்கினாலும் இந்த உள்நாட்டில் உள்ள மக்களின் போராட்ட நெருப்பு தன்னெழுச்சியாக மேலும் மேலும் பற்றிக் கொண்டே வருகிறது.