தமிழகத்தில் தேசிய குடியுரிமை சட்டம் பதிவு செய்யப்படாது என்ற உறுதியை தமிழக முதலமைச்சர் அளிக்காவிட்டால் சட்டமன்றம் கூடும் போது கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்த முடிவெடுக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் அருகே திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் ஒன்றினைந்து தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி கலந்து கொண்டார். தி.மு.க. சார்பில் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன், தமுமுக மாநில பொதுச்செயலாளர் ஹாஜாகனி, விடுதலை சிறுத்தை கட்சி மண்டல பொறுப்பாளர் விவேகானந்தன் மற்றும் அனைத்து கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் எம்.எல்.ஏ, பாலபாரதி, "இந்தியாவில் 13 மாநில அரசுகள் தேசிய குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தப்படமாட்டாது என்று அறிவித்துள்ளது, கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்கள் இந்த சட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளன.
வரும் ஏப்ரல் மாதம், தமிழகத்தில் இதற்கான பதிவுப்பணிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேசிய குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தப்படாது என்ற உறுதியை தமிழக அரசு அளிக்காவிட்டால் வரும் சட்டமன்ற கூட்டத் தொடரின் போது கோட்டையை முற்றுகையிட அனைத்து கட்சிகள் சார்பில் முடிவெடுக்கப்படும்," என்று பாலபாரதி தெரிவித்தார்.