மக்களின் உணவு தேவைக்கு முக்கிய பொருளாக இருப்பது வெங்காயம். இப்போது வெங்காயத்தின் பெயரைச் சொன்னாலே அதை உரிக்காமலேயே கண்களில் கண்ணீர் வரும் அதிர்ச்சியோடு தான் மக்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் எகிப்து, துருக்கி போன்ற வெளிநாடுகளிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அவை ஒவ்வொரு ஊர் காய் கறி மார்கெட்டுக்கும் விற்பனைக்கு வந்துள்ளது.
இந்த எகிப்து, துருக்கி வெங்காயத்தைப் பற்றி சமீபத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. அப்படிப்பட்ட துருக்கி வெங்காயம் இன்று ஈரோடு மார்கெட்டுக்கு விற்பனைக்கு வந்தது.
அதை விற்பனை செய்த வியாபாரிகள் பொதுமக்களிடம் 'வாங்க... வாங்க.. அமைச்சர் செல்லூர் ராஜூ சொன்ன இதயத்துக்கு நல்லதான துருக்கி வெங்காயம் இதுதான்...' என கூவி கூவி விற்பனை செய்தனர். இதனைக் கேட்டு மக்கள் புன்முறுவல் செய்தவாரே நகர்ந்தனர். ஆனால் அதிகமானோர் துருக்கி வெங்காயத்தை வாங்கவில்லை. அவர்களின் கவனம் நாட்டு வெங்காயத்தின் மீதுதான் இருந்தது.