கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தோட்டப்பாடி என்ற ஊரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 32). இவரது மனைவி ஜெயமணி (வயது 30). ரவிச்சந்திரன் லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்குச் சொந்தமாக 20 ஆடுகள் உள்ளன. இந்த ஆடுகளை ரவிச்சந்திரன் மனைவி ஜெயமணி வளர்த்து வருகிறார். பகலில் வயல்வெளி பகுதியில் ஆடுகளை மேய்த்துவிட்டு மாலையில் தங்கள் நிலத்தில் உள்ள காட்டுக்கொட்டாய் பகுதியில் உள்ள பட்டியில் அடைத்து விட்டு வீட்டுக்குச் செல்வது வழக்கம்.
இந்நிலையில் வழக்கம்போல் நேற்று காலை ஆடுகளை மேய்ப்பதற்கு ஓட்டிச் செல்ல ஜெயமணி ஆடுகள் அடைத்திருந்த பட்டிக்கு வந்து பார்த்தபோது எட்டு ஆடுகள் இறந்து கிடந்தன. மேலும் 3 ஆடுகள் உடலில் கடுமையான காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தன. மேலும் சற்று லேசான காயத்துடன் 5 ஆடுகள் துடித்துக் கொண்டிருந்தன. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஜெயமணி கணவருக்கு தகவல் சொல்ல, கணவர் ரவிச்சந்திரன் காட்டுக்கொட்டாய்க்கு வந்தார். இறந்த ஆடுகள், கடிபட்ட ஆடுகளைப் பார்த்தபோது ஆடுகளின் உடலின் பல இடங்களில் மர்ம விலங்கு கடித்த பலமான காயங்கள் இருந்துள்ளன. இதையடுத்து, வனத்துறை அலுவலர் சத்யபிரியா, கால்நடை மருத்துவர் சரண்யா, கிராம நிர்வாக அலுவலர் ரஞ்சித் குமார் ஆகியோருக்கு இது குறித்து தகவல் அளித்தனர்.
அவர்கள் அனைவரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆடுகள் எப்படி இறந்தன; ஆடுகளை கடித்த மர்ம விலங்கு எது; மர்ம விலங்கின் நடமாட்டம் அப்பகுதியில் உள்ளதா என்பதை அங்கு பதிந்துள்ள கால் தடத்தைக் கொண்டு ஆய்வு செய்தனர். மேலும் ஆடுகளைக் கடித்த மர்ம விலங்கு குறித்து தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள். இறந்து போன ஆடுகள், உயிருக்குப் போராடிய நிலையில் இருந்த ஆடுகள் என மொத்தம் 20 ஆடுகள் இறந்து போய்விட்டன. இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.