கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே செம்பாகுறிச்சி காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். விவசாய கூலி தொழிலாளி, இவரது மகள் 20 வயது கவிதா. இவர் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சென்னிமலை அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அப்போது கவிதாவுக்கும், ஆத்தூர் அருகே உள்ள ராம நாயக்கன் பாளையம் கிராமத்தை சேர்ந்த பாட்டப்பன் மகன் பாஸ் குமார் என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில் கரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து தற்போது வரை ஊரடங்கு சட்டம் அமலில் உள்ளதால் பஸ், ரயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில் கல்லூரிக்கும் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ள காரணத்தினால் காதலர்கள் இருவரும் நேரில் சந்திக்க முடியாமல் பரிதவித்துள்ளனர். இருவரும் தங்கள் செல்போனில் மட்டுமே பேசி உரையாடி வந்துள்ளனர். இதனால் ஒருவருக்கு ஒருவர் நேரில் பார்க்க முடியாத ஏக்கம் இருவரையும் வாட்டி வதைத்துள்ளது. இந்த பிரிவின் ஏக்கத்தை தாங்க முடியாது காரணத்தால் பாஸ் குமார் நேற்று முன்தினம் தனது வீட்டில் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு தன் காதலியை பார்க்க கவிதா ஊருக்கு வந்துள்ளார். பின்னர் இருவரும் சைக்கிளில் ஈரியூர் காட்டுப்பகுதியில் உள்ள அருஞ் சோலையம்மன் கோயிலுக்கு சென்று உள்ளனர். அங்கு அம்மனை சாட்சியாக வைத்து கவிதாவுக்கு பாஸ் குமார் தாலி கட்டியுள்ளார்.
பின்னர் இருவரும் வெவ்வேறு பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதால் வீட்டில் தமது திருமணத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இதையடுத்து என்ன செய்யலாம் என்று ஆலோசனை செய்துள்ளனர். அப்போது இருவரும் தற்கொலை செய்து கொள்வது என்று முடிவு செய்து, தாங்கள் வைத்திருந்த செல்போன்கள் பணம், சாப்பிட்டது போக மிச்சமிருந்த மரவள்ளிக் கிழங்கு நாவல்பழம் ஆகியவற்றை கோயில் படிக்கட்டில் வைத்துவிட்டு இருவரும் கோயில் சிலைகளில் சுற்றப்பட்டிருந்த துணிகளை எடுத்து அவைகளை இணைத்து முடிச்சுப்போட்டு கோயில் வளாகத்தில் இருந்த கொட்டகையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இந்த நிலையில் நேற்று காலை கோயில் பக்கம் சென்ற கிராம மக்கள் சிலர், அங்கு இரண்டு பேரின் சடலம் தொங்குவதை கண்டு திடுக்கிட்டனர். இதுகுறித்து கீழ்குப்பம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து கள்ளக்குறிச்சி டிஎஸ்பி இராமநாதன், சின்னசேலம் இன்ஸ்பெக்டர் ராஜா, கீழ்குப்பம் எஸ்ஐ ஏழுமலை, தனிப்பிரிவு ஏட்டு மோகன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரேதங்களை கைப்பற்றி கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
காதலர்கள் தற்கொலை குறித்து கவிதாவின் தந்தை ராமலிங்கம் கீழ்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காதலர்கள் இறப்பு இரு குடும்பத்தினர் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.