சமூக சேவை செய்யும் அமைப்பான ரோட்டரி கிளப் மூலம், அதன் உறுப்பினர்களான செல்வந்தர்களும் தொழிலதிபர்களும், தங்களால் இயன்ற உதவியை ஏழை, எளியோருக்குச் செய்து வருகின்றனர்.
சென்னை, நந்தம்பாக்கத்திலுள்ள சென்னை வர்த்தக மையத்தில், ‘சிம்மாசனம் 2020’ என்ற பெயரில் மாவட்ட அளவிலான மாநாடு, மேதகு கவர்னர் பன்வாரிலால் துவக்கி வைக்க, டாக்டர் ஜமீர் பாஷா (மாவட்ட கவர்னர்), திருநாவுக்கரசு (சேர்மன்) போன்ற ரோட்டரியன்கள் ஏற்பாட்டில், ஜனவரி 4 மற்றும் 5 ஆகிய இரு நாட்கள் நடந்து வருகிறது.
‘நக்கீரன்’ ஆசிரியர் நக்கீரன் கோபால், கார்த்திகைச் செல்வன் போன்றவர்கள் பத்திரிக்கையாளர்கள் என்ற முறையிலும், ஆன்ட்ரியா, சாக்ஷி அகர்வால் போன்ற நடிகைகளும், பின்னணி பாடகியான சின்மயி போன்றவர்களும், இந்த மாநாட்டில் சிறப்பு பேச்சாளர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.
“சேவையுள்ளம் கொண்டவர்கள் ஆயிரக்கணக்கில் கூடியிருந்த இந்த மாநாட்டில், ஒரு பெண்ணின் சபை நாகரிகமற்ற பேச்சால் சலசலப்பு உண்டானது..” என நம்மிடம் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார், அந்த மதுரை மாவட்ட ரோட்டரியன். அவர் குறிப்பிட்ட பெண், சின்மயி.
அந்த மாநாட்டில் சின்மயி அப்படியென்ன செய்தார்?
‘ரோட்டரியில் பெண்கள்’ என்னும் தலைப்பில் பேசவே சின்மயி அழைக்கப்பட்டிருந்தார். ஆனால், அந்த மேடையில் தனது ‘பெர்சனல்’ சமாச்சாரத்தை விவரிக்க முயற்சித்தார். கவிஞர் வைரமுத்துவுக்கும் தனக்கும் உள்ள பிரச்சனை, யூனியனிலிருந்து தன்னை ராதாரவி வெளியேற்றியது என சொந்தக் கதையைச் சொல்லிவிட்டு, நக்கீரன் கோபால் குறித்தும் பேச ஆரம்பித்தார். “நான் பி.ஜே.பி., அந்தக் கட்சியினர் எனக்கு பிளாட் வாங்கிக் கொடுத்ததாக நக்கீரனில் எழுதியிருக்காங்க. நக்கீரன் கோபால் சார்.. அந்த பிளாட் சாவியைக் கொடுங்க..” என்று வம்பிழுத்தார். சின்மயி ராங் ரூட்டில் பேசுவதைக் கண்ட கவர்னர் ஜமீரும், சேர்மன் திருநாவுக்கரசுவும் அவரிடம் “நீங்க இறங்குங்க.. அவரு (நக்கீரன் கோபால்) எங்க கெஸ்ட், நீங்களும் கெஸ்ட்.. மேடையில் கெஸ்ட்டை வைத்துக்கொண்டு நீங்க இப்படி பேசக்கூடாது.” என்று குரல் கொடுக்க, “என்னால இனி பேச முடியாது. நான் கிளம்புறேன்..” என்று விறுவிறுவென்று மேடையிலிருந்து இறங்கினார். அப்போது கூட்டத்திலிருந்து “கை நீட்டி ரெண்டு லட்ச ரூபாய் வாங்கிட்டு எப்படி ஓடுறா பாருங்க.. சின்மயி யாருங்கிறது இப்ப தெரிஞ்சு போச்சு..” என்று விமர்சனம் எழ, எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல், ஓட்டமும் நடையுமாக வேகத்தைக் கூட்டி மாயமானார்.” என்றார்.
சேவைக்காகவே தங்களை அர்ப்பணித்து வருபவர்கள் ஒன்றுகூடிய ரோட்டரி மாநாட்டின் மேடையை, தன் இஷ்டத்துக்குக் கிறுக்கி விளையாடும் ட்விட்டர் பக்கம் என்று நினைத்தாரா சின்மயி?