வேலூர் மாவட்டம் வாணியம்பாடி சென்னாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பூவேந்தர். அவருடைய 13 வயது மகன் லோகேஷ் மற்றும் அதே பகுதியை சேர்ந்த மதிவாணன் என்பவரின் மகன் 13 வயது ஆகாஷ்.
இரண்டு பேரும் வாணியம்பாடி ஆற்றுமேடு பகுதியில் உள்ள ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என்கிற தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் அம்பூர்பேட்டை பகுதியில் ஒரு ஆசிரியையிடம் தினசரி டியுஷன் படித்து வருகின்றனர்.
நேற்று ( ஆகஸ்ட் 11ந்தேதி ) பள்ளிக்கு விடுமுறை என்பதால் டியூசனில் மூன்று வேளை ஆசிரியை பாடம் நடத்தியுள்ளார். காலை இரண்டு முறை டியுஷன் சென்று படித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளனர் இரண்டு மாணவர்களும். மீண்டும் மதியம் 2 மணி முதல் 6 மணி வரை நடைபெறும் டியூசன் வகுப்பிற்கு சென்றுள்ளனர்.
6 மணிக்கு அவர்களின் பெற்றோர்கள் மாணவர்களை அழைத்து அந்த ஆசிரியையின் வீட்டுக்கு சென்றுள்ளனர். இரண்டு மாணவர்களும் சாப்பிட செல்வதாக கூறி மாலை 3 மணிக்கே சென்றுவிட்டதாக அந்த ஆசிரியை கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் அனைத்து பகுதிகளிலும் தேடினர். அதோடு, அந்த மாணவர்களின் நண்பர்களின் வீடுகளிலும் தேடியும் எங்கும் இல்லை.
இதனால் இரவு 8 மணிக்கு வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து மாணவர்களை தேடத்துவங்கினர். அந்த மாணவர்கள் சென்னைக்கு இரயில் ஏறி சென்றுள்ளனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இறங்கியவர்கள் அங்குள்ள கூட்டத்தை கண்டு மிரண்டுபோய்வுள்ளனர்.
இரயில்வே போலிஸார் அவர்களிடம் விசாரித்தபோது, வீட்டை விட்டு ஓடிவந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவர்களிடம் முகரியை வாங்கியவர்கள் வாணியம்பாடி போலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை கேள்விப்பட்டதும், போலிஸார், இன்று ஆகஸ்ட் 12ந்தேதி இரண்டு மாணவர்களின் பெற்றோர்களோடு சென்னைக்கு விரைந்து சென்று மாணவர்களை மீட்டு வந்து விசாரணை நடத்திவருகின்றனர்.