ராசிபுரம் அருகே, சட்ட விரோதமாக குழந்தைகளை கடத்தி விற்பனை செய்து வந்த ஓய்வு பெற்ற செவிலியர் அமுதா, அவருடைய கணவர் உள்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்திருக்கும் நிலையில் அவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.
குழந்தை விற்பனை தொடர்பாக வாட்ஸ்அப் ஆடியோ வெளியான விவகாரத்தில் முதல்கட்ட விசாரணையில், அமுதா, குழந்தைகளை சட்ட விரோதமாக பெற்றோர்களிடம் இருந்து விலைக்கு வாங்கி விற்பனை செய்து வரும் இடைத்தரகர் என்பதும் தெரிய வந்தது. இந்த வழக்கில் செவிலியர் அமுதா, அவருடைய கணவர் உள்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
நேற்று இந்த வழக்கில் கைது செய்தவர்களை சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக்கோரி நாமக்கல் மாவட்ட தலைமை நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனு கொடுதிருந்தது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள செவிலியர் அமுதா உட்பட 5 பேரையும் 7 நாட்கள் காவலில் எடுத்து சிபிசிஐடி விசாரிக்க அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கில் ஜாமீன் கோரி கைது செய்யப்பட்ட அமுதா, அவரது கணவர் ரவிச்சந்திரன், லீலா, பர்வீன், ஹசீனா உள்ளிட்ட 5 பேரின் ஜாமீன் மனுவை நாமக்கல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.