Skip to main content

துருக்கியில் சிகிச்சை பெறும் குழந்தை; தமிழ்நாடு அழைத்து வர முதல்வர் உதவி

Published on 22/09/2023 | Edited on 22/09/2023

 

A child receiving treatment in Turkey Sponsored by CM MK Stalin  

 

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மனோஜ் என்பவர் கடந்த 7 ஆம் தேதி தனது 2 வயது பெண் குழந்தையுடன் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்துகொண்டிருந்தார். அப்போது நடுவானில் அவரது இரண்டு வயது பெண் குழந்தை சந்தியாவிற்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், அவசரமாகத் துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் விமானம் தரையிறக்கப்பட்டது. அங்கு இஸ்தான்புல் மெடிக்கானா மருத்துவமனையில் குழந்தை சந்தியா அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

அவசர மற்றும் தீவிர சிகிச்சைக்காகக் கையில் வைத்திருந்த மொத்த பணமும் செலவழிந்துள்ளது. அதே சமயம் குழந்தையின் மேல் சிகிச்சை செய்திடத் தமிழ்நாடு கொண்டு வர மருத்துவரிடம் ஆலோசனை பெறப்பட்டது. அப்போது குழந்தை சந்தியாவிற்கு கடுமையான சுவாச பிரச்சனை இருப்பதால், மருத்துவக் குழுவின் கண்காணிப்பில், சுவாசக் கருவிகளுடன் விமானத்தில் பயணம் மேற்கொள்ள மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டது.

 

இஸ்தான்புல் நகரிலிருந்து மருத்துவ வசதிகளுடன் குழந்தை சந்தியாவை தமிழ்நாடு அழைத்து வரத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் பெற்றோர் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையினை பரிசீலனை செய்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சந்தியாவினை மேல்சிகிச்சைக்கு சென்னைக்கு அழைத்து வர ரூபாய் 10 இலட்சம் அளித்து உத்தரவிட்டுள்ளார். தற்போது அயலகத் தமிழர் நலத்துறை வாயிலாக நடவடிக்கை எடுக்கப்பட்டு சென்னை அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்