திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பாச்சலூர் மலைக் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யராஜ். இவருடைய மகள் கலைவாணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), பாச்சலூர் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்துவந்தார்.
இந்நிலையில், நேற்று (15.12.2021) காலை பள்ளிக்குச் சென்ற கலைவாணி, பள்ளியின் பின்புறம் உள்ள ஒரு புதரில் எரிந்த நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார். தகவலறிந்த தாண்டிக்குடி போலீசார் கலைவாணி உடலை மீட்டு சடலத்தின் அருகே இருந்த பெட்ரோல் கேன் மற்றும் தீப்பெட்டியைக் கைப்பற்றினர். போலீசார் விசாரணையில் கலைவாணியின் அக்கா மற்றும் தம்பி இருவரும் அதே பள்ளியில் படிப்பதாகவும், காலையில் 9:30 மணிக்கு பள்ளிக்கு வந்த சிறுமி பின்னர் நீண்ட நேரமாகியும் வகுப்பறைக்கு வரவில்லை எனவும் தெரிகிறது. இதையடுத்து அதே பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் பள்ளியின் பின்புறம் உள்ள ஒரு புதர் பகுதியில் சென்று பார்த்தபோது கலைவாணி முகம் எரிந்த நிலையில் கிடப்பதைப் பார்த்து தகவல் சொல்லியுள்ளார்.
இதனிடையே, கலைவாணியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், கலைவாணி தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பில்லை, அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனக் கூறி பள்ளியை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பள்ளியில் தலைமை ஆசிரியர் முருகன் மற்றும் ராஜதுரை மணிவேல் ஆகிய இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே பணிக்கு வந்திருந்தனர். இந்நிலையில், சிறுமியின் சந்தேக மரணம் குறித்து தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் ஏ.டி.எஸ்.பி. லாவண்யா தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார். எரிந்த நிலையில் பள்ளி மாணவி பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.