தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் ஜூலை 19 ஆம் தேதி வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிகிறது. இந்நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, ஆணையர் சங்கர் ஜிவால், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.
உலக அளவில் கரோனா மூன்றாம் அலையின் தொடக்கத்தில் நாம் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு அண்மையில் தெரிவித்திருந்தது. இந்நிலையில் முக்கிய தேவாலயங்கள், கோவில்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்த ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். கரோனா மூன்றாவது அலை குழந்தைகளை தாக்கும் என்பது ஒரு யூகம் தான் என மருத்துவர்கள் கூறியுள்ளனர் என தெரிவித்துள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை குறைக்கவில்லை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது எனவும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கரோனா மூன்றாம் அலை மற்றும் நீட் தேர்வு குறித்த விவாதம் எழுந்திருக்கும் நிலையில் தற்பொழுது தமிழ்நாடு தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.