ஆளுநரின் பொறுப்பை உணர்ந்து முதல்வர்கள் செயல்பட வேண்டும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநர் உரைக்குப் பிறகு, பேரவையில் முதல்வர் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே ஆளுநர் வெளியேறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிகழ்வு தொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், ''ஆளுநர்களின் பொறுப்பை உணர்ந்து முதல்வர்கள் செயல்பட வேண்டும். தமிழகத்திற்கும் தமிழ்நாட்டுக்கும் மாறுபாடு இல்லை. 'தமிழ்நாடு' என்ற வார்த்தைக்கு மிகப்பெரிய வரலாறு உள்ளது. பல போராட்டங்களுக்குப் பிறகு தமிழ்நாடு என்ற பெயர் நமக்கு கிடைத்துள்ளது'' என தெரிவித்துள்ளார்.