சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் இன்று (28/02/2022) மாலை 04.00 மணிக்கு நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில், கலந்துக் கொண்ட அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய சுயசரிதை நூலான 'உங்களில் ஒருவன்' புத்தகத்தை வெளியிட்டார். அதனை தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பெற்றுக் கொண்டார்.
விழாவில் பேசிய தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் உமர் அப்துல்லா, "ஆளும் தமிழகத்தை மூன்றாகப் பிரித்தால், ஏற்க முடியுமா என ஜம்மு- காஷ்மீர் விவகாரத்தில் கேள்வி எழுப்பியவர், மக்களின் ஒப்புதலின்றி ஜம்மு- காஷ்மீர் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. நான் எப்படி இருக்க வேண்டும் என்பது என் உரிமை; மத அடையாளங்களை பின்பற்றுவது தனி உரிமை. எந்தவித ஆடை அணிய வேண்டும் என்பது தனிமனித சுதந்திரம். வேற்றுமைகள் இருந்தாலும் ஒற்றுமையுடன் இருப்பதுதான் இந்தியாவின் சிறப்பு. காஷ்மீருக்காக தமிழகம் குரல் கொடுத்தது, அதற்காகவே நான் இங்கு நிற்கிறேன்" எனத் தெரிவித்தார்.
விழாவில், ஜம்மு- காஷ்மீரின் பாரம்பரிய தரைவிரிப்பை (கார்ப்பெட்) தமிழக முதலமைச்சருக்கு பரிசாக வழங்கினார் உமர் அப்துல்லா.
அதைத் தொடர்ந்து பேசிய கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், "கூட்டாட்சிக்கு ஆபத்து வரும் போது, முதல் நபராக நிற்பவர் மு.க.ஸ்டாலின். மாநில உரிமைகளை மீட்பதில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பு முக்கியமானது. படிப்படியாக வளர்ந்து இந்த உயரத்தை அடைந்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். உங்களில் ஒருவன் தமிழ்ச் சமூக வரலாற்றையும் சொல்கிறது" என்றார்.
விழாவில், கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பீகார் மாநில சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ் மற்றும் தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தி.மு.க.வின் தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் விழாவில் கலந்துக் கொண்டனர்.