திருச்சியைச் சேர்ந்த ஸ்டான் சுவாமி ஜார்கண்டில் பழங்குடியினரின் உரிமைக்காக குரல் கொடுத்துவந்த நிலையில், தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் இணைந்து பரப்புரையில் ஈடுபட்டதாக கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்ட அவர், மும்பை தலோஜா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சிறையில் மருத்துவ சிகிச்சை கிடைக்கவில்லை என்று புகார் எழுந்த நிலையில், நேற்று (05.07.2021) அவர் உயிரிழந்தார். இந்நிலையில், அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகிறார்கள். இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின், "பழங்குடியின மக்களின் உரிமைப் போராளியும் மனிதவுரிமைச் செயற்பாட்டாளருமான ஸ்டேன் சுவாமி அவர்கள் மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன். ஆழ்ந்த இரங்கல். அடித்தட்டு மக்களுக்காகப் போராடிய அவருக்கு நேர்ந்த துயரம் இனி எவருக்கும் நிகழக் கூடாது" என்று தெரிவித்துள்ளார்.