மக்கள் நீதி மய்யத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று (11.02.2021) சென்னை வானகரத்தில் துவங்கியுள்ளது.
இன்று நடக்க இருப்பது மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதலாவது பொதுக்குழு கூட்டம் ஆகும். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதா, கூட்டணி அமைப்பதா என்பது குறித்த முக்கிய அரசியல் முடிவுகள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் பிப்ரவரி 21ஆம் தேதி நடக்கும் கட்சியின் நான்காம் ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் பற்றியும் இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்பொழுது சென்னை வானகரத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தொடங்கியுள்ள கூட்டத்தில், 600க்கும் மேற்பட்ட மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் கமல்ஹாசனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது. அதேபோல் கமல்ஹாசனை முதல்வர் வேட்பாளராக ஏற்கும் கட்சியுடன் கூட்டணி அமையும் என்பது போன்ற 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.