உலக அளவில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், சர்வதேச கண்காட்சியில் தமிழகத்தின் அரங்கினை திறந்து வைப்பதற்காகவும் தமிழக முதல்வர் இன்று மாலை துபாய் செல்ல இருக்கும் நிலையில் தற்பொழுது சென்னை விமான நிலையம் வந்தார்.
துபாயில் கடந்த ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி உலக கண்காட்சி தொடங்கியது. வருகின்ற மார்ச் 31ம் தேதி வரை இந்த கண்காட்சியானது நடைபெறுகிறது. இக்கண்காட்சியில் மார்ச் 25 முதல் 31 வரை தமிழ்நாடு வாரமாக அனுசரிக்கப்படுகிறது. இதற்காக தமிழ்நாடு சார்பாக தமிழ்நாடு அரங்கு அமைக்கப்பட்டிருக்கிறது. இதனைத் திறந்து வைப்பதற்காக இன்று மாலை துபாய் செல்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதனைத்தொடர்ந்து அபுதாபி செல்லும் தமிழக முதல்வர் தமிழ் நாட்டிற்கான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காகத் துபாயின் முன்னணி தொழில் மற்றும் வணிக நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளைச் சந்திக்க உள்ளார். அதேபோல் புலம்பெயர் தமிழர்களுடன் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடரை முடித்துக்கொண்டு துபாய் செல்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அப்பொழுது மூத்த அமைச்சர்கள் அவருக்குச் சால்வை அணிவித்து பாராட்டு மற்றும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.