கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. அதே சமயம் தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது.
இந்த சூழலில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தூத்துக்குடியில் நேற்று முன்தினம் (21-12-23) காலை வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து, திருநெல்வேலி பெரியார் பேருந்து நிலையம் பகுதியில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார். மேலும் அப்பகுதி மக்களுக்கு வெள்ள நிவாரணப் பொருட்களை வழங்கினார். இதனையடுத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுப் பேசுகையில், “மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு ரேஷன் கார்டுகளுக்கு தலா ரூ.6 ஆயிரம் வழங்கப்படும். மழையால் உயிரிழந்தவர்களுக்கு வழங்கும் நிவாரணம் ரூ. 4 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்படுகிறது. தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு ரேஷன் அட்டைகளுக்குத் தலா ரூ.1,000 வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், இன்று (23-12-230 கேரளா மாநிலத்திலிருந்து லாரிகள் மூலம் தென்மாவட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் தமிழ்நாட்டுக்கு வந்து சேர்ந்தன. கேரளா மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “கேரளா மாநில சகோதரர்களின் அன்புக்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.