தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், தனித் தேர்வர்கள், சிறைக் கைதிகள் என மொத்தம் 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.
முதல்நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்கள் தேர்வு நடைபெறவுள்ளது. செல்போன், உள்ளிட்ட மின்னணு சாதனப் பொருட்களைத் தேர்வு அறைக்குள் கொண்டு செல்லக் கூடாது என்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முறைகேடுகளைத் தவிர்க்க மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதவுள்ள எனதருமை மாணவச் செல்வங்களே... All the best! நீங்கள் பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளத்தான் வினாத்தாளைப் படித்துப் பார்க்க முதலில் 10 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இதனை மற்றுமொரு தேர்வாகக் கருதி நம்பிக்கையோடு எழுதி வெற்றி பெறுங்கள். பெற்றோர்களும் உங்கள் பிள்ளைகள் உரிய நேரத்தில் தேர்வு மையத்துக்குச் சென்றிடுவதை உறுதி செய்யுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.