Skip to main content

சேடப்பட்டி முத்தையா மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

Published on 21/09/2022 | Edited on 21/09/2022

 

Chief Minister M.K.Stalin's condolence on Sedapatti Muthiah's demise!

 

முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா (வயது 77) உடல்நலக்குறைவுக் காரணமாக, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். சேடப்பட்டி முத்தையா மறைவுக்கு தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து வருகின்றனர். 

 

அந்த வகையில், தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (21/09/2022) வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தமிழக அரசியல் களத்தில் சேடப்பட்டியார் என மதிப்புடன் அனைவராலும் அழைக்கப்படும் தமிழக சட்டப்பேரவையின் முன்னாள் தலைவர் சேடப்பட்டி முத்தையா, உடல் நலக்குறைவால் மறைந்த செய்தியறிந்து மிகவும் துயருற்றேன். 

 

நான்கு முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட சேடப்பட்டி முத்தையா, தமிழக சட்டப்பேரவையின் தலைவராக 1991- ஆம் ஆண்டு முதல் 1996- ஆம் ஆண்டு வரை பணியாற்றியுள்ளார். 

 

கடந்த 2006- ஆம் ஆண்டு கலைஞர் முன்னிலையில் தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்ட சேடப்பட்டி முத்தையா, அப்போது முதல், கட்சியின் வளர்ச்சிக்காகவும், மேன்மைக்காகவும் தொடர்ந்து பங்காற்றி வந்தார். 

 

அண்மையில் மதுரை சென்றிருந்த போது, உடல் நலக்குறைவு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சேடப்பட்டி முத்தையாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்து வந்தேன். எனினும், சிகிச்சைப் பலனின்றி அவர் மறைவுற்ற செய்தி, தற்போது வந்தடைந்து வேதனையைத் தந்துள்ளது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்