Skip to main content

“பக்தியை சிலர் பகல்வேஷ அரசியலுக்கு பயன்படுத்துகின்றனர்” - முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published on 21/10/2024 | Edited on 21/10/2024
Chief Minister M.K.Stalin says Some people use devotion for petty politics

தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருக்கோவில்களில் திருமணங்கள் நடத்தி வைக்கப்படும். அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் இன்று 304 ஜோடிகளுக்கு பல்வேறு கோயில்களில் திருமணம் நடைபெற்றது. அதன்படி, சென்னை திருவான்மீயூரில் 31 ஜோடிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திருமணம் நடத்தி வைத்தார். திருமணமான புதிய ஜோடிகளுக்கு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.60,000 மதிப்புள்ள சீர்வரிசையும், 4 கிராம் தங்கத் தாலியும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “முதலமைச்சராக அறநிலையத்துறை நிகழ்ச்சியில் தான் அதிகமாக கலந்து கொள்கிறேன். அமைச்சர் சேகர்பாபு சீரிய முயற்சியோடு, 31 இணையர்களுக்கு திருமணம் நடத்தி வைக்கக்கூடிய இந்த நிகழ்ச்சியில், கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தக்கூடிய வாய்ப்பை பெற்றதற்கு மகிழ்ச்சியடைகிறேன். இந்து அறநிலையத்துறை மட்டுமல்லாமல், அனைத்து துறைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து நாங்கள் கலந்துகொள்வது உண்டு. கடந்த 3 ஆண்டுகளில் இந்த துறையில் சார்பில் அமைச்சர் சேகர்பாபு முயற்சியோடு பல்வேறு சாதனைகளை செய்துகொண்டு இருக்கிறோம். 

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, கோவில்கள் பழமை மாறாமல் புதுப்பிக்க மாநில அளவில் ஒரு வல்லுநர் குழுவை அமைத்தோம். அவர்கள் தரும் ஆலோசனையின்படி, அந்த பணியை தொடர்ந்து நாம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். கடந்த 3 வருடத்தில் 2,226 கோயில்களில் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. ரூ.6,792 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் 10,638 கோயில்களில் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. ரூ.1,103 கோடி நன்கொடை கிடைத்துள்ளது. தமிழில் குடமுழுக்கு, தமிழில் அர்ச்சனை, அனைத்து சாதி அர்ச்சகர் என முத்தாய்ப்பான பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. கோயில்களில் அன்னதானம் திட்டம் மூலம் நாள்தோறும் 92,000 பேர் பசியாறுகின்றனர். கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்படாமல் இருந்த தங்க முதலீடு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம். 

அறநிலையத்துறை செயல்பாடுகளை உண்மையான பக்தர்கள் பாராட்டுகின்றனர். பக்தியை பகல்வேஷ அரசியலுக்கு சிலர் பயன்படுத்துகின்றனர். அரசின் சாதனைகளை தடுக்கவே வழக்குகளை தொடர்கின்றனர். அனைவரின் உரிமைகளை காக்கும் அரசாக திமுக அரசு விளங்குகிறது” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்