Skip to main content

“உரிய நிவாரணத் தொகையை ஒன்றிய அரசு வழங்கும் என நம்பிக்கை கொள்வோம்” - முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published on 13/01/2024 | Edited on 13/01/2024
Chief Minister M.K.Stalin says I hope that the Center will provide the appropriate amount of relief

சென்னை மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடியில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு நிவாரணப் பணிகள் நடைபெற்றது. அதேபோல் மத்தியக் குழுவும் ஆய்வு செய்த நிலையில், மத்திய அரசிடம் தமிழக அரசு நிவாரணத் தொகையை கோரியிருந்தது. அதே சமயம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழகத்திற்கான நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக எம்பிக்கள் சந்திக்க நேரம் கேட்டு கடந்த 04/01/2024 அன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில் தமிழக அரசு கோரியிருந்த வெள்ள நிவாரண தொகையான ரூ.37,907.19 கோடியை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வலியுறுத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அவரைத் தமிழக எம்பிக்கள் சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு ஜனவரி 13 ஆம் தேதி தமிழக அனைத்து கட்சி எம்பிக்கள் குழுவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி இருந்தது. மேலும், சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கான நிவாரண நிதியை உடனே மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என அனைத்து கட்சி எம்பிக்கள் குழு மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் நேரில் வலியுறுத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

இதனைத் தொடர்ந்து, இன்று பிற்பகல் 3:30 மணிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அனைத்துக் கட்சி எம்பிக்கள் சந்தித்துப் பேசினர். திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தலைமையிலான 8 பேர் கொண்ட குழுவினர் அமித்ஷாவை சந்தித்துப் பேசினர். இந்த குழுவில் ஜெயக்குமார், வைகோ, சுப்பராயன், பி.ஆர்.நடராஜன், ரவிக்குமார், நவாஸ்கனி, சின்ராஜ் (கொ.ம.தே.க) ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். அப்போது வெள்ள பாதிப்புகளுக்கான நிவாரண நிதியை உடனே மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். 

இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், ‘தமிழ்நாடு அடுத்தடுத்து சந்தித்த இருவேறு பேரிடர்களிலிருந்து மீள்வதற்குத் தேவையான நிதியை வழங்க வலியுறுத்தி, நமது அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துக் கோரிக்கை மனு அளித்துள்ளனர். ஒன்றியக் குழுக்களும் வந்து பார்வையிட்டு சென்றுள்ள நிலையில், நமது கருத்துகளை உள்வாங்கி உரிய நிவாரணத்தொகையை ஒன்றிய அரசு வழங்கும் என நம்பிக்கை கொள்வோம்’ என்று குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்