சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழக்கும் விழா உள்ளிட்ட பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வரும் 29ஆம் தேதி சேலம் வருகிறார்.
அன்று காலை சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் சேலம் காமலாபுரம் வருகை தரும் அவர், அங்கிருந்து கார் மூலமாக வந்து உடையாப்பட்டி பைபாஸில் நடக்கும் அரசு விழாவில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு பொதுமக்களிடம் நேரடியாக கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார். அப்போது முதியோர், ஆதரவற்றோர் மற்றும் விதவைகளுக்கான உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா, தொகுப்பு வீடு, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 36 ஆயிரம் பேர் மனுக்களை வழங்கினர். இதில், தகுதிவாய்ந்த ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்குப் பல்வேறு துறைகளின் சார்பில் அன்றைய தினம் நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்குகிறார்.
இதையடுத்து, அன்று மாலை 3 மணியளவில், சேலம் 5 சாலையில் உள்ள ஜெயரத்னா திருமண மண்டபத்தில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்கிறார். மறைந்த திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் வீரபாண்டி ராஜாவின் உருவப்படத்தை திறந்துவைக்கிறார். முதல்வர் வருகையையொட்டி மாவட்ட நிர்வாகமும், கட்சியினரும் முன்னேற்பாட்டுப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.