தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (15/11/2021) வடகிழக்கு பருவமழையையொட்டி பெய்த கனமழையால் கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையில் உள்ள பெரிய குளத்தின் கரைகளில் ஏற்பட்ட உடைப்புகளைப் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அதேபோல், கிருஷ்ணசாமி திருமண மண்டபத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் தங்கியுள்ள சுமார் 75 நிவாரண உதவிகளை வழங்கினார்.
தேரேகாலில் கனமழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள கால்வாய் கரை உடைப்பு மற்றும் சாலை சேதங்களை முதலமைச்சர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த பறக்கின்காலை சேர்ந்த பாஸ்கரனின் குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகைக்கான காசோலையை வழங்கினார். பத்மநாபபுரம் புத்தனார் கால்வாயிலில் ஏற்பட்டுள்ள உடைப்புகளைப் பார்வையிட்டார்.
இந்த நிகழ்வின்போது, தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பினர்கள், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.அரவிந்த் இ.ஆ.ப., மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.