அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் (80) உடல்நலக் குறைவு காரணமாக ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த நிலையில் இன்று மாலை காலமானார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கரோனாவால் பாதிக்கப்பட்ட மதுசூதனன் சிகிச்சைக்கு பின் தேறியிருந்த நிலையில், வயது மூப்பு காரணமாக கட்சி வேலைகளில் இருந்து ஓய்வு பெற்று தண்டையார்பேட்டையில் இருந்த வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார். இந்நிலையில் அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக சேர்க்கப்பட்டிருந்த மதுசூதனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது அவர் காலமாகியுள்ளார். அவரது மறைவு அதிமுகவிற்கு பெரும் இழப்பு என அதிமுகவினர் உட்பட அனைத்து தரப்பில் இருந்தும் இரங்கல்கள் வெளியிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மதுசூதனன் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் வெளியிட்டுள்ளார். அதில், அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மறைவு செய்தி கேட்டு அறிந்து அதிர்ச்சி, துயரம் அடைந்தேன். அதிமுகவின் முன்னாள் முதலமைச்சர்கள் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் அன்பை பெற்றவர். அதிமுகவின் அவைத் தலைவராக பணியாற்றிய மதுசூதனன் கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர். அதிமுகவிற்குள் ஏழை-எளியோர், அடித்தட்டு மக்களின் குரலாக இறுதி மூச்சு வரை திகழ்ந்தவர்'' என அவரது இரங்கலை பதிவு செய்துள்ளார்.