ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த ஆலோசனையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரும் கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வருகிறார்கள். இது தொடர்பாக ஏற்கனவே பல்வேறு வழக்குகளை உச்ச நீதிமன்றம் சந்தித்திருந்தாலும், இது தொடர்பாக தமிழக அரசின் தீர்மானத்தின் மீதான நிலைப்பாட்டை எடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. தற்பொழுது வரை 7 பேர் விடுதலை தொடர்பான தீர்மானம் ஆளுநரிடம் நிலுவையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தகுந்தது.