வடகிழக்கு பருவமழையையொட்டி,காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு மற்றும் உறுதித் தன்மை குறித்தும், ஏரியின் 5 மற்றும் 19 கண் கொண்ட மதகுகளில் ஏற்பட்டுள்ள அடைப்பான்களை சீரமைக்கும் பணிகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதேபோல், செம்பரம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் நாளொன்றுக்கு 530 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கும் திறனுடைய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தைப் பார்வையிட்டு நேரில் ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டம், புழல் ஏரியின் நீர் இருப்பு மற்றும் உறுதித் தன்மை குறித்தும் முதலமைச்சர் நேரில் ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்வின் போது, தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரகத் தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சட்டமன்ற உறுப்பினர் கு.செல்வப்பெருந்தகை, பொதுப்பணித்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர், நீர்வளத்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.