தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று (20.05.2021) சேலம் உருக்காலையில் 500 படுக்கைகள் கொண்ட புதிய சிகிச்சை மையத்தை திறந்துவைத்தார். அதனைத் தொடர்ந்து திருப்பூரில் நடைபெற்ற விழாவில் 18 வயதிற்கு மேல் 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி முகாமை துவக்கிவைத்து, பின்னர் இன்று காலை மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திருச்சி வருகை தந்தார்.
திருச்சியை அடுத்துள்ள பஞ்சப்பூர் அருகே ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கான இடத்தை வாகனத்தில் இருந்தபடியே பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி நினைவு நாளை முன்னிட்டு, திருச்சி ரயில்வே ஜங்ஷனில் உள்ள ராஜீவ் காந்தி உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர், டிவிஎஸ் டோல்கேட்டில் உள்ள அரசு தங்கும் விடுதிக்குச் சென்றார். மேலும், இன்று மாலை 5 மணி அளவில் திருச்சி அரசு மருத்துவமனைக்குச் சென்று ஆய்வு மேற்கொள்கிறார். அதைத்தொடர்ந்து திருச்சி மாவட்டம் துவாக்குடி உள்ள என்ஐடியில் கரோனா சிகிச்சை பிரிவை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்க உள்ளார். பின்னர் அங்கிருந்து திருச்சி விமான நிலையம் சென்று சென்னை புறப்படுகிறார்.
முதல்வர் ஸ்டாலினுடன் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் உடன் இருந்தனர். முதல்வர் வருகையையொட்டி திருச்சி மாநகரில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.