டெல்டா மாவட்டங்களைப் பார்வையிடுவதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்து சேர்ந்தார். விமான நிலையம் வந்து சேர்ந்த அவருக்கு அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் வரவேற்பு கொடுத்தனர். அதன் பின் அங்கிருந்து கிளம்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்பாராதவிதமாக திமுகவின் மூத்த தொண்டரான திருச்சி செல்வேந்திரன் வீட்டிற்குச் சென்று உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவரை நலம் விசாரித்து சிறிது நேரம் உரையாடினார்.
பின் அங்கிருந்து அரசு தங்கும் விடுதியில் தங்குவதற்காக புறப்பட்டுச் சென்றபோது, திடீரென முதல்வர் தன்னுடைய வாகனத்தை நிறுத்திவிட்டு திருச்சி மாநகராட்சி அலுவலகத்திற்குள் நுழைந்தார். முதல்வர் வருகையை பார்த்த மாநகராட்சி அலுவலர்கள், அதிகாரிகள் பதற்றமானதோடு மாநகராட்சி அலுவலகமும் பரபரப்பாக காணப்பட்டது. உள்ளே நுழைந்த அவர், மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டம் முடிவடைந்த சில மணித்துளிகளில் அங்கு உள்ள கோப்புகளைப் பார்வையிட்டு அதிகாரிகளிடம் விசாரணையில் ஈடுபட்டார்.
இந்த ஆய்வின் போது அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எஸ். ரகுபதி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன் உட்பட ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.