தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "துளி போன்ற ஓராண்டு காலத்தில் கடல்போல் சாதனைகளைச் செய்துள்ளோம். தமிழக மக்களுக்காக கடந்த ஓராண்டில் உண்மையுடன் உழைத்தேன் என்ற நம்பிக்கையுடன் இந்த அவையில் பேசுகிறேன். நான் கலைஞர் அல்ல; அவரைப் போல பேசத் தெரியாது, எழுதத் தெரியாது; ஆனால் அவரைப் போல உழைக்க முயன்றேன்.
தி.மு.க. அரசின் திட்டங்கள் சென்று சேராத இடமே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. சமச்சீரான வளர்ச்சியை அடையும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 29C பேருந்தில் பயணித்துத்தான் நான் பள்ளிக்குச் சென்றேன்; அந்த வழித்தடப் பேருந்தில் இன்று நான் ஆய்வு செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. 29C பேருந்தில் இன்று பொதுமக்களுடன் பயணம் செய்து அவர்களுடன் கலந்துரையாடினேன். மகளிருக்கு பேருந்தில் இலவசம் என்ற திட்டம் குறித்து மூன்று வழித்தடங்களில் 465 பயணிகளிடம் கருத்துக் கேட்கப்பட்டது. மகளிருக்கு பேருந்தில் இலவசம் என்ற திட்டத்தால் பெண்கள் சேமிக்கும் நிலைக்கு முன்னேறியுள்ளனர்.
பேருந்து சலுகை காரணமாக, ஒவ்வொரு பெண்ணுக்கும் ரூபாய் 600 முதல் ரூபாய் 1,200 வரை மிச்சமாகிறது. மகளிருக்கு பேருந்தில் இலவசம் என்ற திட்டம் மூலம் பெண்களின் மாத வருமானத்தில் 11% மிச்சமாகியுள்ளது. கரோனா கால உதவித்தொகையான 4 ஆயிரம் ரூபாயை 2.9 கோடி பேர் பெற்றுள்ளனர். ஆவின் பால் விலையை ரூபாய் 3 குறைத்ததன் மூலம் ஒரு கோடி பேர் பயன் பெற்றுள்ளனர். கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் புதிதாக 1.34 கோடி பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். 108 அவசர ஊர்தி மூலம் 16.41 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர்" எனத் தெரிவித்தார்.